கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் வீணாகும் வகுப்பறை தளவாட பொருட்கள்

சேலம், மே 22:  சேலம் கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் தளவாட பொருட்கள் மழை, வெயிலில் காய்ந்து வீணாகி வருவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான கருப்பூரில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் உள்ள சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டேபிள், சேர், உள்ளிட்ட தளவாட பொருட்கள் உள்ளன. இதனிடையே, இன்ஜினியரிங் கல்லூரியின் பல்வேறு துறைகளின் மாடிகளில், பழுதான தளவாட பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, இதுபோன்ற பொருட்கள், உரிய அனுமதிபெற்று ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் தொகையை கொண்டு, புதிய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும். ஆனால், கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் பல மாதங்களாக மரம் மற்றும் இரும்புகளால் ஆன டேபிள், சேர் போன்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை வெயில், மழையில் காய்ந்து வீணாகி வருகிறது. எனவே, இதனை உடனடியாக அப்புறப்படுத்தி, புதிய பொருட்களை வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: