×

ஆத்தூர் நகரப்பகுதியில் பல்லாங்குழியான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஆத்தூர், மே 22: ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆத்தூர் நகரப்பகுதியில் சேலம்- உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் விநாயகபுரம், உடையார்பாளையம், காமராஜனார் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. இந்த சாலையில் அரசு மருத்துவமனை, ஆர்டிஓ அலுவலகம், கால்நடை மருத்துவமனை, டிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் உள்ளன. மேலும் பெரம்பலூர் சாலைக்கு செல்லவும், இந்த பாதை முக்கிய போக்குவரத்து கேந்திரமாக விளங்கி வருகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கால்நடை மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை பகுதியில் உள்ள சாலைகள் இருபுறமும், மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலை அரிப்புகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,city ,Attur ,roads ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்