மாவட்டத்தில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி

ஈரோடு, மே 22: ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அவற்றிற்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநாய்க்காடி தடுப்பூசி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாததால் அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடித்து வருகிறது. வெறிநாய் கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனம் 2 ஆயிரத்து 500 தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது. மேலும் தடுப்பூசி மருந்து துறையின் மூலமாக 2 ஆயிரத்து 500 தடுப்பூசி மருந்து பெறப்படுகிறது. மாவட்ட அளவில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்படவுள்ளது.

ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை மற்றும் கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் சில அமைப்புகள் சார்பாக இந்த பணி மேற்கொள்ளப்படும். நாய்களுக்கு தடுப்பூசி போடுதல், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பணிகளில் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

வெறிநாய் கடிக்கான தடுப்பூசி ஆண்டுக்கு ஒரு முறை போட வேண்டும். ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களின் காதுகளில் பஞ்ச் செய்யப்பட்டிருக்கும். அந்த நாயை தவிர்த்து மற்ற நாய்களுக்கு முறைப்படி குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்படவுள்ளது. இதன் மூலமாக நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: