வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் 20 வாகனங்கள் மட்டுமே அனுமதி

ஈரோடு, மே 22: வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் செல்ல தேர்தல் பார்வையாளர், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட 20 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோடு அடுத்துள்ள சித்தோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுளளது. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையடுத்த அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் 20 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தேர்தல் பார்வையாளர், போலீஸ் பார்வையாளர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட போலீஸ் எஸ்.பி., உள்ளிட்ட 20 அதிகாரிகளின் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது நேற்று முன்தினத்தில் இருந்து அமலில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை இந்த நடைமுறை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 20 அதிகாரிகளின் வாகனங்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படும். இதற்காக தனியாக பாஸ் வழங்கப்பட்டுள்ளது.  வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் நுழைவு வாயிலில் இருந்து ஒருங்கிணைத்து ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே அழைத்து செல்லப்படுவர். தீயணைப்பு, 108 ஆம்புலன்ஸ், உணவு, குடிநீர் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது, என்றனர்.

Related Stories: