×

மக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை

தர்மபுரி, மே 22:  மக்காச்சோளப்பயிரைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குநர்(பொ) சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2018 மே மாதம் முதல், அந்நிய நாட்டில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ள புதிய வகை படைப்புழுக்களை கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு 5 என்ற அளவில் கடந்த வருடம் பாதிப்புக்கு உள்ளான இடங்கள் மற்றும் இந்த வருடம் புதியதாக மக்காச்சோளம் பயிரிடக்கூடிய இடங்களில் வைத்து பயிர்களை ஆரம்ப நிலையிலிருந்து கண்காணிப்பது அவசியம் ஆகும். விதை முளைப்பு முதல் முன்வளர்ச்சி பருவம் (3-4 வாரங்கள் வரை) படைப்புழுவின் தாக்குதல் 5 சதம் வரை பயிர் தாக்கப்பட்டிருந்தால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் எவ்விதமான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவையில்லை. ஆனால் 10 சதம் தாக்குதல் தென்பட்டால் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்காச்சோள விதைப்பிற்கு முன் நிலத்தை நன்கு ஆழ உழுதல் வேண்டும். இதன் மூலம் மண்ணிலுள்ள படைப்புழுக்களின் கூட்டுப்புழுக்கள், பறவை போன்ற இரை உண்ணிகளுக்கு உணவாகி அழிக்கப்படுகின்றன. விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் மக்காச்சோளம் விதைக்க வேண்டும். வயலில் ஊடுபயிராக அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு பயறுவகை பயிறுகளை விதைக்க வேண்டும். மக்காச்சோள பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் பறவை தாங்கி அதாவது ‘வு” வடிவ குச்சிகள் வைக்க வேண்டும். மக்காச்சோள வயலில் 3-4 வரிசை வரை வயலை சுற்றிலும் பொறிப்பயிர்கள் (உதாரணமாக நேப்பியர் புல்) நடவு செய்ய வேண்டும். பொறிப்பயிரில் தாக்குதல் தென்பட்டவுடன் 5 சதம் வேப்பங்கொட்டை கரைசல் அல்லது அசாடிராக்டின் 1500 மில்லி அளவில் தெளிக்க வேண்டும். நடவுக்கு பின் மக்காச்சோளப் படைப்புழுவின் முட்டை குவியல் முதல் மற்றும் இரண்டாம் இளம் புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம். மேலும், ஏக்கருக்கு 10-15 என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தி வயலிலுள்ள அனைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மக்காச்சோளத்தின் வளர்ச்சி பருவத்தின் போது 5 முதல் 10 சதம் சேதாரம்  தென்படும் போது உயிரியல் பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவது மிகுந்த பலனைத்தரும். இயற்கை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தும் போது ராசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பாதிப்பு அதிகமாகும் போது ரசயன பூச்சிக்கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். எனவே, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் இப்படைப்புழுவின் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்