×

தேனி மக்களவை, ஆண்டிபட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை முடிவு தெரிய இரவு 11 மணி ஆகலாம்

தேனி, மே 22:  பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. முடிவு தெரிய இரவு 11 மணி ஆகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  தேனி பாராளுமன்றத்தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197க்கும் கடந்த மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது.

தேனி பாராளுமன்றத்  தொகுதிக்கான தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து, இத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை (23ம்தேதி) நடக்க உள்ளது.

வாக்கு எண்ணிக்கை குறித்து தேனி மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவிபல்தேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தேனி பாராளுமன்றத் தொகுதியில் உள்ளடக்கிய சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 டேபிள்கள் வீதம் போடப்பட்டு  வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

இதேபோல ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கென தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கும் தொகுதிக்கு 14 டேபிள்கள் வீதம் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் போடி, உசிலம்பட்டி,  போடி, ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்றத்தொகுதிகளில் 23 சுற்றுகளும், பெரியகுளம், கம்பம் தொகுதிகளில் 22 சுற்றுகளும், சோழவந்தான் தொகுதியில் 18 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்போது, ஒவ்வொரு சுற்றிலும் 14 டேபிள்களும் எண்ணப்பட்ட பிறகு, அந்தந்த சுற்று பெற்ற வாக்கு முடிவுகள் தெரிவிக்கப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 5 வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரமான வி பேட் இயந்திரத்தினை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, விபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் வெற்றி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.  

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தமிழகம் முழுவதும் முதல்முறையாக விபேட் வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்தை எண்ணும் முறை தற்போது கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் வெற்றி  குறித்த அறிவிப்பு வெளியாக இரவு 11 மணி வரைகூட ஆக வாய்ப்புள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று வேட்பாளர்களின் சார்பில் ஒவ்வொரு டேபிளிலும் கண்காணிக்க வாக்குஎண்ணிக்கை முகவர்களாக பணியாற்ற தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 31 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் தங்களின் பிரதிநிதிகளாக முகவர்கள் நியமிக்க விண்ணப்பித்ததில் 971 பேர் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

Tags : Theni Lok Sabha ,Andipatti ,Periyakulam ,
× RELATED ஓபிஎஸ், டிடிவி உள்பட 5 வேட்பாளர்கள் மீது வழக்கு