×

வாகனங்களில் விதியை மீறி அதிக வெளிச்ச விளக்கால் அடிக்கடி விபத்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி, மே 22:  ஆண்டிபட்டி பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் வாகனங்களின் அதிக வெளிச்ச முகப்பு விளக்குகளால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் கிழக்கு பக்கத்தின்  நுழைவாயில்  மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி நகர் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஆண்டிபட்டியை சுற்றியுள்ள 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக ஆண்டிபட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு  நாள்தோறும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இவ்வாறு உள்ள சூழ்நிலையில் தங்களது வேலைகளை முடித்து விட்டு இரவு நேரங்களில் கார், வேன், ஆட்டோ, டூவீலர், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வீட்டிற்கு திரும்புகின்றனர். அப்போது சாலைகளில் வரும் வாகனங்களில் அரசு விதிகளை மீறி அதிக பவரான முகப்பு விளக்குகளை எரிய விட்டு அசுர வேகத்தில் செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூசுவதால் நிலை தடுமாறி விபத்துக்களில் சிக்குகின்றனர். மேலும் வேகத்தடைகள், வேகத்தடுப்பு கம்பிகள் யாவும், அந்த வெளிச்சத்தில் தெரியாததால் விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. ஆண்டிபட்டி கணவாயிலிருந்து குன்னூர் வரை அதிகமான சாலை விபத்துக்கள் இதனால் தான் ஏற்படுவதாக ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வாகனங்களில் விதிமுறைகளை மீறி முகப்பு விளக்குகள், ஏர்ஹாரன்கள் போன்றவற்றை பயன்படுத்துவதே ஆகும். குறிப்பாக ஆண்டிபட்டி பகுதியில் அதிக பவர் வெளிச்சத்தால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே வட்டார போக்குவரத்துறையினர் ஆண்டிபட்டி பகுதியில் நடைபெறும் சாலை விபத்துக்களை தடுக்க, சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர்.

Tags : Traffic officers ,
× RELATED சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.1.39 லட்சம் அபராதம்