×

கார்பைடு கற்கள் மாம்பழ விற்பனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மாம்பழங்கள் பறிமுதல்

தேனி, மே 22:  தேனியில் நேற்று உணவு பாதுகாப்புத் துறையினர் கார்பைடு கற்கள் வைத்து பழுக்கவைத்த மாம்பழங்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். தேனி மாவட்டத்தில் மாம்பழ சீசன் துவங்கியுள்ளதால் சில பழக்கடைகளில் கார்பைடு கற்களால் பழுக்கவைத்த பழங்கள் விற்கப்படுகிறது. இப்பழங்களை வாங்கி சாப்பிடும் சிறியவர் முதல் பெரியவர் வரை வயிற்றுபோக்கு மற்றும் பல உடல்உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து தினகரனில் இரு தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.  

தினகரன் செய்தி எதிரொலியாக கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவின்பேரில், தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு  நியமன அலுவலர் டாக்டர்.கருணாகரன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டியராஜன், இளங்கோவன், மணிமாறன், சிரஞ்சீவி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தேனி நகரில் மாம்பழம் விற்பனை செய்யும் கடைகளிலும், மாம்பழங்களை மொத்த வியாபாரம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள குடோன்களுக்கும் சென்று திடீர் சோதனை நடத்தினர். ஆய்வின்போது, கார்பைடு கற்கள் சிக்கவில்லை. அதேசமயம் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மாம்பழ குடோன்களை தொடர்ந்து, தேனி வீரப்ப அய்யனார் கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, குடிநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்றதாகவும், அசுத்தம் நிறைந்தும் இருந்தது. இதனையடுத்து, இந்நிறுவனத்தை சுகாதாரமாக்கும் வரை தண்ணீர் சுத்திகரிப்பு செய்து, கேன்களில் அடைத்து விற்பனை செய்யக்கூடாது என குடிநீர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்  அளிக்கப்பட்டது.

சோதனை குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாகரன் கூறும்போது, கார்பைடு மாம்பழங்கள் விற்பனையில் ஈடுபட்டால் பழங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, விற்பனை செய்வோர் மீது நீதிமன்றத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இதேபோல கோடைகாலத்தில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி சில போலியான குடிநீர் நிறுவனங்கள் சுகாதாரமற்ற குடிநீரை கேன்களில் அடைத்து விற்கும் நிலை உள்ளது. குடிநீரை வாங்கும் போது, ஐஎஸ்ஐ, எப்எஸ்எஸ்ஐ அங்கீகாரம் உள்ளதா என சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.

Tags : Mango Sales Action Food Safety Officers ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?