இறைவணக்கம் துவங்கி அனைத்தும் ஆங்கிலம்தான்... தனியார் பள்ளிகளுக்கு இணையாக கலக்கும் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி

திருச்சி, மே 22:  திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 220 குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளி துவங்கியதிலிருந்து தமிழ் மீடியத்தில் இயங்கி வந்தது. ஆங்கில மோகம் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்ததால், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர் சேர்க்கையை உயர்த்தவும், முன் மாதிரி பள்ளியாக மாற்றிக்காட்டவும் முடிவு செய்து, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மீடியமாக மாற்றினர்.

Advertising
Advertising

எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலை இறை வணக்கம் துவங்கி மாலை வரை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உரையாடல் நடக்கிறது. மாணவர் சேர்க்கையை உயர்த்த பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்காக பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே விளம்பர பலகைகள் வைத்துள்ளனர். அதில், ‘எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில மீடிய வசதி உள்ளது. பள்ளி வளாகத்தில் ஆசிரியரும், மாணவரும் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடும் சிறப்பு முறை. கட்டணமில்லா தரமான இலவச கல்வி வழங்கப்படுகிறது. கராத்தே, சிலம்பம், பறையாட்டம், கர்நாடக சங்கீதம், யோகாசனம், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் முதலிய கட்டணமில்லா இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கற்றலில் பின்தங்கிய மாணவருக்கு மாலை நேர இலவச பயிற்சி. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற முதுகலைப்பட்டம் பெற்ற 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், புத்தகம், குறிப்பேடு, காலணி, புத்தகப்பை, சீருடை, அட்லஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை என அரசின் மூலம் வழங்கப்படும் பல இலவச உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களே சிந்திப்பீர்! செயல்படுவீர்! பணத்தை கொட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களே, நம் பெருமைமிகு பிராட்டியூர் பள்ளியில் தரமான இலவச கல்வி வழங்கப்படுகிறது. பணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகுளும் இப்பள்ளியில் அதே தரத்துடன் இலவசமாக கிடைக்கின்றன. மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கோடை விடுமுறையில் அனைத்து நாட்களிலும் அட்மிஷன் நடக்கிறது’ என குறிப்பிடப்பட்டள்ளது.

 இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஷாதேவி, ‘ஆசிரியர்களாகிய எங்களுக்கு அரசு நல்ல சம்பளம் தருகிறது. வாங்கும் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதை காட்டிலும், அதை தாண்டி எங்களால் இப்பள்ளிக்கும், இப்பகுதி குழந்தைகளுக்கும் என்ன செய்ய முடியும் என யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆங்கில மீடியத்தில் படித்தான் அறிவாளியாக வளர்வார்கள் என நம்பி தனியார் பள்ளியில் பல ஆயிரங்கள் செலவு செய்து படிக்க வைக்கின்றனர். பெற்றோர்களுக்காக நாங்களே கேட்டு வாங்கி ஆங்கில மீடியம் வைத்துள்ளோம். மேலும் இப்பகுதியில் பெரும்பாலும் ஏழைக் குழுந்தைகள் தான் உள்ளனர். அவர்களின் நலன் கருதி இப்பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்ற முயற்சித்து வருகிறோம். பள்ளியின் சிறப்பம்சம் குறித்து விளம்பர பேனர் வைத்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ வைத்து தீரன்நகர், ஆலங்குளம், பிராட்டியூர் என 2 கி.மீ., சுற்றளவு பிரசாரம் செய்து மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். வீடு வீடாக சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பள்ளி குறித்து அனைவரும் அறிந்துகொள்ள ‘பிரைட் பிராட்டியூர்’ என குறும்படம் எடுத்துள்ளோம். இப்படத்தை யுடியூபில் காணலாம். மேலும் இக்குறும்படத்தை திருச்சியில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி கோரி உள்ளோம். நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிவிக்கவே விளம்பர பேனர், குறும்படம் வெளியிடுகிறோம். விளம்பரத்துக்காக அல்ல. ஆங்கிலத்தில் அழகாக எழுத ‘இட்டாலிக் ரைட்டிங்’ மாஸ்டர் வைத்துள்ளோம். குழந்தைகளுக்கு பல்திறன் வளர்க்க மாஸ்டர்கள் நியமித்துள்ளோம். அவர்களுக்கான கட்டணத்தை பள்ளி ஆசிரியர்கள் நாங்களும், ஸ்பான்ஸர் மூலமும் பெற்று வழங்கி வருகிறோம். தனியார் பள்ளியில் படித்தால்தான் நன்றாக படிக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை உடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம்’ என்றார்.

Related Stories: