வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

திருச்சி, மே 22:  வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த அவரது கணவர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி ஏர்போர்ட் கக்கன் காலனியை சேர்ந்தவர் சிங்கராஜன். இவரது மகள் மகாலட்சுமி (28). ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துள்ளார். இதில் விருதுநகரில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்தபோது, ஆசிரியர் சங்கரநாராயணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த சங்கரநாராயணன் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்கவில்லை. இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தொடர்ந்து கணவரை பிரிந்த மகாலட்சுமி, தந்தை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் சில காலம் கழித்து மீண்டும் கணவர் சங்கரநாராயணனுடன் மகாலட்சுமி பேச துவங்கினார்.

 மீண்டும் இருவரும் சேர்ந்து வாழலாம் அதற்காக விருதுநகரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு ரூ.14 லட்சம் தேவைப்படும் என மகாலட்சுமியிடம் ஆசைவார்த்தை கூறினார். தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தார். இவரின் பேச்சை கேட்டு பணம் கொடுக்க மகாலட்சுமி சம்மதித்தார். அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தோழி ஆசிரியையான தேன்மொழி என்பவருடன் திருச்சி வந்த சங்கரநாராயணன், மகாலட்சுமியிடம் இருந்து ரூ.14 லட்சம் வாங்கி சென்றார். ஆனால் பணத்தை வாங்கி சென்ற சங்கரநாராயணன் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகாலட்சுமி, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகாலட்சுமி இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏர்போர்ட் போலீசுக்கு துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார். இதையடுத்து ஆசிரியர்கள் சங்கரநாராயணன், தேன்மொழி மீது வழக்குப்பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: