×

ராசிமணலில் காவிரியின் குறுக்கே அணை கட்டுமானப் பணி உடன் துவங்க நடவடிக்கை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

மன்னார்குடி, மே 22; ராசி மணலில் அணை கட்டுமானப் பணியினை உடன் துவங்க நடவடிக்கை எடுத்திட தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகம் தொடர்ந்து திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு செயல் பட்டு வரும் நிலையில் முதலமைச்சர் குமாரசாமி பொறுப்பேற்றது முதல் தமிழகம் உபரி நீரை சேமிக்க தவறிவிட்டதாகவும், தமிழகம் சமவெளி பகுதி என்பதால் அணை கட்ட முடியாத நிலை உள்ளதால் தான் மேகதாது அணையை கட்டி தண்ணீரை தேக்கி தமிழக பாசனத்திற்கு வழங்க உள்ளதாக தெரிவித்து அதற்கு மத்திய அரசிடம் ஆய்வறிக்கை தயார் செய்ய அனுமதியும் பெற்றார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு ஆய்விற்கு தான் அனுமதி என்றும், அணை கட்ட முடியாது எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி  உண்மையாகவே தமிழக நலனில் அக்கறையோடு பேசுவாரேயானால் சட்டவிரோதமாக மேகதாது அணை கட்டுவதை கைவிட்டு தமிழக எல்லையான ராசி மணலில் தமிழக அரசு சட்டப்படி அணை கட்ட ஒத்துழைப்பு தர முன்வர வேண்டும்.


தமிழக எல்லை பகுதியில் ராசிமணல் அணை கட்டுமானப் பணி துவக்கி முடிக்கப்படுமேயானால் சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல் நோக்கி 42கிமீ மேகதாது வரையிலும், வடக்கே 25 கிமீ தூரம் அஞ்செட்டி வரை இரு பிரிவுகளாக தண்ணீரை சேமிப்பு பகுதிகளாக தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கும் போது ஒகேனக்கல் அருவியை கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே அதற்கு மேல் பகுதியில் 18 கிமீ தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று பகுதியாக ராசி மணல் உள்ளதால் குறைந்த செலவில் விரைவாக அணை கட்டி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தமிழகம் முழுவதும் குடிநீர் தேவையும், காவிரி டெல்டாவின் குறுவை, சம்பா சாகுபடிகளும் உறுதி செய்ய முடியும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்தி பாதுகாக்கப்படும், பொருளாதாரம் உயரும் .சேலம், தர்மபுரி மக்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய அனுமதியும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத் திற்கு தமிழக அரசு இத்திட்டம் குறித்து அறிக்கையை விரைவில் முன் மொழிந்து அனுமதி பெற வேண்டும். தமிழகம் தண்ணீரை சேமிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க காவிரி மேலாண்மை ஆணையம் தயாராக உள்ளதாக ஆணைய தலைவர் மசூத் உசேனின் கருத்தும் அமைந் துள்ளது.
இதனை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தீவிரமாக போ ராட்ட களமிறங்கியதை தொடர்ந்து மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகளின் ஒத்தக் கருத்தை உருவாக்கிடவும் முக்கியத்துவத்தை உணர்த்திடவும் ஜூன் 10ல் பூம்புகாரில் கல்லெடுத்து ஜூன் 12ல் காலை 10 மணிக்கு ராசி மணலில் அணை கட்ட தொடங்குவற்கு ஒகேனக்கலில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சங்கமிக்கும் விழிப்புணர்வு வாகனப் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

Tags : PRR Pandian ,Kavirai ,dam ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்