×

கோடை உழவு செய்தால் மண் பொலபொலப்பு தன்மை அடையும் வேளாண் அதிகாரி தகவல்

திருவாரூர், மே 22: வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ அல்லது டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதிபட உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடையில் உழவு மேற்கொள்வதால் புல் பூண்டுகள் வேர் அறுந்து கருகி விடுகிறது. கடின தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது. பயிர் பருவ காலங்களில் சிலவகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூண்டு புழுவாக மாறி பேரிச்சங்கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கு அடியில் வளர்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் கூண்டு புழுக்கள் மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு அவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த பயிர் சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாக குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண்ணில் நீர்பிடிப்பு தன்மை பெருகிறது.


இதனால் பெய்யும் மழை, பூமிக்குள் சென்று மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மேலும் மண்ணின் பவுதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் பொலபொலப்பு தன்மை பெறுவதால் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நாம் இடும் உரம் சமச்சீராக கிடைத்து வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...