சேதுபாவாசத்திரத்தில் புயலில் சாய்ந்த தென்னைகள் ஏரியில் கொட்டி தீயிட்டு எரிப்பு

சேதுபாவாசத்திரம், மே 22: சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி ஏரியில் கொட்டி தீயிட்டு விவசாயிகள் எரித்து வருகின்றனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சாகுபடியின்றி தென்னையை மட்டுமே வாழ்வாதாரமாக விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயலால் தென்னை விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்த பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த 1.50 லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்ந்தது. சாய்ந்த தென்னை மரங்களுக்கு அரசு சார்பில் மரம் ஒன்றுக்கு ரூ.1,100 வீதம் நிவாரண தொகையை காலதாமதமாக வழங்கியது. அதேநேரம் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகினர். காரணம் புயலுக்கு முந்திய காலங்களில் எல்லாம் வறட்சியில் பட்டுப்போன தென்னை மரங்களை திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து விலை கொடுத்து வாங்கி சென்ற வியாபாரிகள் புயலுக்கு பின் மரங்களை இலவசமாக கூட வாங்கி செல்லவில்லை. எனவே மரங்களை வெட்டி அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள், வியாபாரிகளுக்கு சொந்த செலவில் சம்பளம் கொடுத்து மரங்களை வெட்டி லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர். அதேநேரம் வெட்டி அப்புறபடுத்தப்பட்ட தென்ன தோப்புகளில் கிடந்த தூர்பகுதி மற்றும் கொண்டல் பகுதிகளை அப்புறப்படுத்தி போடுவதற்கு இடம் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. தற்போது அப்புறப்படுத்த முடியாமல் கிடந்த மரங்கள், தூர்பகுதி மற்றும் கொண்டல் பகுதிகளை விவசாயிகள் சாலையோரங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: