×

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 36 வாகனங்களுக்கு தகுதிச் சான்று நிராகரிப்பு

மதுரை, மே 22: மதுரை ஆயுதப்படை மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு நேற்று நடைபெற்றது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களின் பிரேக், டயர்கள், அவசரக் கதவுகளின் இயக்கம், வாகனத்தின் பாடி, படிக்கட்டுகள், இருக்கைகள், இருக்கையின் கீழ் பள்ளிக் குழந்தைகளின் பை வைக்கும் ரேக்குகள், வாகன உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் தரம், இயக்கு திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 1,389 பள்ளி வாகனங்களில் 375 பள்ளி வாகனங்கள் ஆய்வில் பங்கேற்றன. இதில், முதலுதவி பெட்டியில் மருந்து இல்லாமை, தீயணைப்பு கருவி பராமரிக்காதது, படிக்கட்டுகள் விதிப்படி இல்லாதது, வேக கட்டுப்பாட்டு கருவி குறைபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக 36 வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

குறைபாடுள்ள வாகனங்களை சீரமைத்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. நேற்றைய ஆய்வில் பங்கேற்காத பள்ளி வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதிச் சான்று பெற வேண்டியது அவசியம். இந்த ஆய்வில் எஸ்பி மணிவண்ணன், போக்குவத்து துணை கமிஷனர் அருண்பால கோபாலன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சுரேஷ் (தெற்கு), செல்வக்குமார் (வடக்கு), பொன்னுரங்கம் (மையம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்