×

புதுக்கோட்டை குறைந்த விதை, நீரை பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி வழிமுறை

காவிரி டெல்டா மாவட்டங்களில்  நெல் சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை  பொய்த்து போனதாலும், காவிரி நதிநீர் பற்றாக்குறையின் பொருட்டும் நெல்  சாகுபடி பரப்பளவு குறைந்தது மட்டுமல்லாமல் விளைச்சலும் பாதிக்கப்பட்டது. நெல்  பயிரானது வளர்வதற்கு அதிக தண்ணீர் தேவை என்ற பன்நெடுங்காலமாக இருந்து  வரும் கண்ணோட்டத்தில் தான் இன்றைய காலம் வரை அதிக அளவு தண்ணீரை பயன்படுத்தி  நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நெற்பயிரானது நீர் வாழ்  தாவரம் அல்ல. அது ஒரு புல் வகையைச் சார்ந்த தாவரமாகும். மற்ற களைகள்  வளர்வதை தடுக்கும் நோக்கில் தான் அதிகமாக தண்ணீர் கட்டி நெல் சாகுபடி  செய்யப்படுகிறது. எனவே குறைந்த அளவு இடு பொருட்களையும், குறைந்த அளவு  தண்ணீரையும் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யும் முறையே திருந்திய நெல்  சாகுபடி முறையாகும்.

தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு

1911ம் ஆண்டு மே  மாதம் வைத்தியராமன் என்பவரால் வெளியிடப்பட்ட “பிழைக்கும் வழி”  என்ற மாத  பத்திரிக்கையின் பக்கம்  எண் 249ல் “ஒற்றை நாற்று நடவு”   பற்றியும்,   பக்கம்  எண் 347ல் பத்தி நடவு பற்றியும்  குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே  திருந்திய நெல் சாகுபடிக்கு முன்னோடியாகும். ஆனால் இதில் சில மாற்றங்களை  மேற்கொண்டு இன்றைய திருந்திய நெல் சாகுபடி முறைகள் பின் பற்றப்பட்டு  வருகிறது.


திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய அம்சங்கள்

தரமான  சான்றுபெற்ற உயர்விளைச்சல் அல்லது வீரிய  ஒட்டு ரகங்களை பயன்படுத்துதல்.  குறைந்த விதையளவு (2 கிலோ ஒரு ஏக்கருக்கு), விதை நேர்த்தி செய்து  விதைத்தல்.  ஒரு ஏக்கர் நடவு செய்ய  ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்)  சுருள்பாய் நாற்றங்கால்  நடவு வயலை துல்லியமாக சமன் செய்தல். இளம் வயது (14  நாட்கள்) நாற்றுகளை பயன்படுத்துதல். மார்க்கர் கருவி மூலம் சதுர முறையில்  அதிக இடைவெளியில் (22.5 ஓ 22.5 செ.மீ) நடவு செய்தல்,  குத்துக்கு ஒரு  நாற்றை பயன்படுத்துதல், களைக்கருவி (கோனோவீடர்) மூலம் களை நிர்வாகம்  மேற்கொள்ளுதல். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப் பாய்ச்சுதல். பச்சை வண்ண  அட்டை மூலம் தழைச்சத்து உரமிடுதல். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகும்.
தரமான  சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் போது அதிக முளைப்புத் திறன் மற்றும்  மற்ற ரக விதைகள் கலப்பு இல்லாமல் தூய்மையாக இருப்பதனால் நல்ல வாளிப்பான  நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்  குறைவாகவே காணப்படும்.

குறைந்த விதையளவு

ஒர் ஏக்கருக்கு 2 கிலோ  விதைகள் மட்டுமே போதுமானதாகும். இதனால் அதிக விதையளவு பயன்படுத்துவது  குறைக்கப்படுவதால் உற்பத்தி செலவு மிகவும் குறைகிறது. ஒரு குத்துக்கு ஒரு  நாற்று எனறு நடுவதாலும், சுருள் பாய் நாற்றங்கால் முறையில் நாற்று உற்பத்தி  செய்யப்படுவதாலும்  விதையளவு குறைந்து விடுகிறது.

 விதை நேர்த்தி செய்து விதைத்தல்

ஒரு  கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் என்ற உயிர் பூசனக் கொல்லி  மருந்தினை தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் விதைகளை ஊறவைத்து மறுநாள் காலை  வடிகட்டி பின்பு விதைகளை முளை கட்டி விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பு  முளைக் கட்டிய விதைகளை ஒரு பாக்கெட் (200 கிராம்) அசோஸ்பைரில்லம், ஒரு  பாக்கெட் (200 கிராம்) பாஸ்போபாக்டீரியம் உயிர் உரத்துடன் நன்கு கலந்து  விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் நடவு செய்ய  ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) சுருள்பாய் நாற்றங்கால்

சாதாரண முறையில் நடுவதற்கு 8 சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். ஆனால் திருந்திய  நெல் சாகுபடி முறைக்கு ஒரு சென்ட் நிலப்பரப்பே போதுமானதாகும். ஒரு மீட்டர்  அகலமும் 40 மீட்டர் நீளமும், 5 செ.மீ உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகள்  அமைக்க வேண்டும். அவற்றின் மேல் 300 காஜ் கனமுள்ள பாலித்தீன் விரிப்பு   அல்லது பழைய பாலித்தீன் உரச் சாக்குகளை பரப்பி வைக்க வேண்டும். அதில்  ஒரு மீட்டர் நீளம், 0.5 மீட்டர் அகலம், 4 செ.மீ உயரம் கொண்ட விதை ப்புச்  சட்டத்தை வைத்து நன்கு முளைவிட்ட இரண்டாம் கொம்பு விதைகளை சீராக தூவ  வேண்டும். பின்பு மக்கிய எருக்கலவையை விதையின் மேல் பரப்பி உள்ளங்கையால்  மெதுவாக அழுத்தி விட வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க  வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் வரை பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க  வேண்டும். விதைத்த 9ம் நாள் 0.5 சத யூரியா கரைசலை பூவாளி கொண்டு தெளிக்க  வேண்டும்.

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து உரமிடுதல்

தழைச்சத்து  உரங்களை தேவைக்கு அதிகமாக நெற்பயிருக்கு அளிக்கும்போது தண்டுத் துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி, புகையான், இலை மடக்குப்புழு மற்றும் குலை நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறைகளாக பிரித்து இடுவதால் மேற்கண்டவற்றின் தாக்குதலை குறைக்க இயலும்.     மேலும் தழைச் சத்து உரங்களை, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் 5:4:1 என்ற அளவில் கலந்து பயிருக்கு சிறுகச் சிறுக கிடைக்குமாறு செய்ய வேண்டும். இலை (பச்சை) வண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை அளிக்கவேண்டும். அதனால் பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளும், நோய்களும்  கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல் உரச் செலவும் பெருமளவில் குறைந்து விடுகிறது.

Tags : Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்