×

எங்கேயும் இல்லை.. இதுபோல் நிலை... மயானத்தில் நடக்கிறது பிரேத பரிசோதனை

வத்தலக்குண்டு, மே 22: வத்தலக்குண்டுவில் மயானத்தில் பிரேத பரிசோதனை அறை இருப்பதால் விபத்தில் இறந்தவர்களை கடைசியாக பெண்கள் பார்க்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான ஊர்களில் பிரேத பரிசோதனை அறை அரசு மருத்துவமனை வளாகத்தில்தான் இருக்கும். ஆனால் வத்தலக்குண்டுவில் மட்டும் மயானத்தில் பிரேத பரிசோதனை அறை உள்ளது. இதனால் வத்தலக்குண்டு பகுதியில் விபத்தினால் ஒருவர் உயிரிழக்கும்போது அவரது உடலை நேரடியாக மயானத்தில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்து விடுகின்றனர்.

தகவலறிந்து வரும் இறந்தவர்களின் தாய், மனைவி மற்றும் பெண் உறவினர்கள் இங்கு வர முடியாமல் போய்விடுகிறது. காரணம் மயானத்திற்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற மரபு இருப்பதாலே. இதனால் விபத்தில் இறந்தவர்களை கடைசியாக கட்டிப்பிடித்து அழ முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள மருத்துவர் குடியிருப்பு பகுதியில் பிரேத பரிசோதனை அறையை மாற்றி அமைக்கும் பணி துவங்கினர்.

ஆனால் அந்த இடத்தில் பிரேத பரிசோதனை அறை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே அத்திட்டம் பாதியில் நின்று போனது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை மயானத்திலே இருந்து வருவதால் இறந்தவர்களை காண முடியாமல் பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.

எனவே பிரேத பரிசோதனை அறையை அதிக இடமுள்ள வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை உட்புறத்தின் ஏதாவது ஒரு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஊருக்கு வெளியே மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் ஜெர்மன் ராஜா கூறுகையில், ‘தமிழ்நாட்டு பெண்கள் பொதுவாக மயான மரபை மீறுவதில்லை. எனவே வத்தலக்குண்டுவில் நீண்டகால  கோரிக்கையான பிரேத பரிசோதனை அறை மாற்றும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு