×

குட்டத்துப்பட்டியில் மணல் திருட்டால் சரியுது நீர்மட்டம் ‘கவனிப்பால்’ கண்டுக்காத அதிகாரிகள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

செம்பட்டி, மே 22: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்டது குட்டத்துப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை. இங்குள்ள தாமரைக்குளம், அலவாச்சிபட்டி வேட்டுவன்குளத்தில் இரவு, பகல் பாராமல் பொக்லைன் இயந்திரம் கொண்டு டிப்பர் லாரி மூலம் மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் குடிநீர் ஆதாரமின்றி தவித்து வருகின்றன. குறிப்பாக வேட்டுவன்குளத்தில் தினமும் 10க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்களில் மணலை திருடி செல்கின்றனர்.

இந்த குளத்தில்தான் அலவாச்சிபட்டி, சாமியார்பட்டிக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஆழ்துளை கிணறு உள்ளது. தற்போது தொடர் மணல் திருட்டால் அந்த ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என புகார் எழுந்துள்ளது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வேட்டுவன்குளத்தில் செங்கல் சூளைகளுக்காக 24 மணிநேரம் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் தினசரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் ‘கவனிப்பால்’ இதனை கண்டும், காணாமல் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுத்து நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...