×

கடும் வறட்சி நிலவுவதால் மரப்பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்

பெரம்பலூர், மே 22: பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், ஊடுபயிர் சாகுபடிகளை கைவிட்ட விவசாயிகள், மரப்பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தளவு விவசாயிகள் ஏரி பாசனத்தையோ, ஆற்று பாசனத்தையோ நம்பியிருக்காததால் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் கிணறு வெட்டி மின்மோட்டார் அல்லது ஆயில் இன்ஜின் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் பல விவசாயிகள் குறுகிய காலப்பயிரான நெல், வெங்காயம்  போன்ற பயிர்களையும், சிலர் நீண்டகால  பயிரான தென்னை, எலுமிச்சை போன்ற மரங்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
நீண்டகால பயிரான தென்னை, எலுமிச்சை மரங்கள் உள்ள வயல்களில் மழை காலம் உட்பட விவசாயிகள் ஆண்டு முழுவதும் ஊடுபயிராக  வெங்காயம்,  உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.
இந்தாண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததாலும், மார்ச், ஏப்ரல், மே  மாதங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெயில் அடித்து வருவதாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் தற்போது ஊடுபயிர் சாகுபடி செய்ய முடியவில்லை.

பொதுமக்களுக்கே குடிநீர் தட்டுப்பாடு பெரும் பகுதியில் காணப்படுகிறது. பாசனத்துக்கு மட்டும் தட்டுப்பாடு இல்லாமலா போகும். இருந்தும் நீண்டகால பயிரான எலுமிச்சை, தென்னை போன்ற வயல்கள் எப்போதும் ஓரளவு ஈரப்பதத்துடனாவது காணப்பட வேண்டும். இல்லையெனில் மரங்கள் காய்ந்து  பட்டுப்போக அல்லது மகசூல் பாதிக்க செய்யும். இந்நிலையில் எலுமிச்சை, தென்னை மரங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் நிலம் முழுவதும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், நிலத்தில் மரக்கன்றுக்கு நடுவே வாய்க்கால்கள் அமைத்து அதற்கு மட்டுமாவது தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் குறைந்தளவு தண்ணீரை கொண்டு மரங்களை காப்பாற்றும் செயல்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தண்ணீரும் வேர்களுக்கு செல்லும் முன்பாக வெயிலுக்கு காணாமல் போவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!