அம்மையநாயக்கனூரில் போர்வெல் பக்கத்திலே கழிவுநீர் குளம்

செம்பட்டி, மே 22: அம்மையநாயக்கனூரில் போர்வெல் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கியிருப்பதால் குடிநீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் கொசுக்களும் பெருகுவதால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் சுகாதார சீர்கேடுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி அலுவலகம் அருகே கி.புதூரில் ஊரின் மையத்தில் உள்ள பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் மேல்நிலை தொட்டி உள்ளது.

இந்த தொட்டிக்கு செல்லும் தண்ணீர் போர்வெல் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரிலும் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரவுநேரங்களில் மட்டுமின்றி பகலிலே கழிவுநீரில் கொசுக்கள் பெருகி கடித்து வருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘தண்ணீர் தொட்டி அருகே தேங்கியிருக்கும் கழிவுநீரால் கொசுக்கள் பெருகி பகலிலே கடித்து வருகிறது. இதனால் நோய் அச்சத்தில் உள்ளோம். பேரூராட்சி அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியிலே இதுபோன்ற மோசமான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் தொட்டி அருகே கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: