×

தரமற்ற குடிநீர் விற்பனையா? டாஸ்மாக் பாரில் அதிகாரி ஆய்வு

நாகை, மே22: நாகை பகுதியில் டாஸ்மாக் பாரில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் பாரில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக நாகை சப்-கலெக்டர் கமல் கிஷோருக்கு புகார்கள் வந்தது. நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரின் தொலைபேசி எண்ணை வழங்கி இந்த  புகார்களை தெரிவிக்கும்படி சப்-கலெக்டர் கூறினார். இதையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தொலைபேசி வழியே நேற்று முன்தினம் இரவு புகார்கள் வந்தது. புகார் தெரிவித்த டாஸ்மாக் பாருக்கு நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு நடத்தினார். அப்பொழுது அங்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. அதில் உணவு பாதுகாப்புத்துறை உரிம எண் உள்ளிட்ட தயாரிப்பு விபரங்கள் இருந்தன. அதேநேரம் சில பாட்டில்களில் சீல் இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து விசாரணை செய்தபோது உபயோகித்த பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் கேன்களில் பிடித்து வைத்து அவசரத்திற்கு வாடிக்கையாளருக்கு வழங்குவதாக தெரிவித்தனர். இந்த பாட்டில்கள் எல்லாவற்றையும் கைப்பற்றி குப்பையில் கொட்டி அப்புறப்படுத்தப்பட்டது. எந்த சூழலிலும் சீல் இல்லாமல் தாங்களே தண்ணீர் பிடித்து வைத்து பாட்டில் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்னய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை சாலை மற்றும் கடற்கரை சாலையில் செயல்படும் இரண்டு டாஸ்மாக் பார்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கும் இதே எச்சரிக்கைகள் பார்களிலும் வழங்கப்பட்டது. அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் பார்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் குறித்து புகார் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு ஆணையரக எண்ணில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

Tags : drinking water Officer examination ,
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்