×

அம்பத்தூர் பகுதியில் அடிக்கடி மின்தடை கள்ளிக்குப்பம் மின் நிலைய திறன் அதிகரிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை தவிர்க்க கள்ளிக்குப்பத்தில் அமைந்துள்ள மின் நிலையத்தின் திறனை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிக்குப்பத்தில் 33 கே.வி துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையம் கடந்த 1992ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கிருந்து, அம்பத்தூர் பகுதிகளான  ராம்நகர், விநாயகபுரம், எஸ்.வி நகர், ஒரகடம், புதூர், பானு நகர், விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், மேனாம்பேடு, ஞானமூர்த்தி நகர், கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், பாலாஜி நகர், சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. அப்போதைய மக்கள் தேவைக்கு 33 கே.வி திறனுடைய மின் நிலையம் போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது இங்கு 1.50 லட்சம் பயனீட்டாளர்கள் உள்ளனர். தனி வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

இவைகளுக்கு, மேற்கண்ட துணை மின்நிலையத்தில் இருந்து போதுமான அளவுக்கு மின் விநியோகம் செய்ய முடிவது இல்லை.  இதனால்  அடிக்கடி 5 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கள்ளிக்குப்பம் துணை மின் நிலையம் பல ஆண்டாக 33 கே.வி திறனில் இருந்து அதிகரிக்கப்படவில்லை. கோடை காலத்தில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. குறிப்பாக, வீடுகளில் ஏ.சி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தி வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் அதிகளவில் மின் தேவைப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த மின் திறனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க முடியாமல் இன்னல் அடைகின்றனர். பகல் நேரங்களில் மிகவும் குறைந்த மின்சாரம் தான் வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்கள் பழுதாகின்றன. எனவே, மேற்கண்ட துணை மின் நிலையத்தை 110 கே.வி திறனாக தரம் உயர்த்திட  பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பி உள்ளோம். ஆனால்,  அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிமாக உள்ளனர். எனவே, மின் வாரிய உயர் அதிகாரிகள் கவனித்து அம்பத்தூர், கள்ளிக்குப்பம் துணை மின் நிலையத்தை 110கே.வி திறனுடையதாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

தனியாருக்கு  முன்னுரிமை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவன துணை மின் நிலையத்துக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து மின் வடத்தை பூமிக்கு அடியில் புதைக்கும் பணிகளை மின் வாரிய அதிகாரிகள் ஆர்வமாக செய்து வருகின்றனர். ஆனால், கள்ளிக்குப்பம் துணை மின் நிலைய திறனை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி செய்தால், இரு பணிகளை ஒன்றாக ஒரே செலவில் முடித்து இருக்கலாம். மேலும், சி.டி.எச் சாலையில் மின் வடம் புதைக்க மற்றொரு முறை பள்ளம் தோண்ட வேண்டாம். இதனால், இன்னொரு முறை மின் வடம் புதைக்க அரசுக்கு கூடுதல் செலவீனம் தான் ஏற்படும், என்றனர்.

Tags : area ,Ambattur ,
× RELATED வாட்டி வதைக்கும்...