×

பெரியபாளையம் ஊராட்சி தண்டுமா நகரில் பூட்டிக்கிடக்கும் பகுதி நேர ரேஷன் கடை


பெரியபாளையம், மே 22: பெரியபாளையம்  ஊராட்சியில், தண்டுமாநகர், ஜெஜெ.நகர், கிரக பிரவேசம் நகர் பகுதி மக்கள், அனைவரும் தோட்டக்கார தெருவில்   உள்ள, ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, கோதுமை,  பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு ரேஷன்  பொருட்களை வாங்கி வந்தனர். இவர்கள், அனைவரும் ஒரே கடையில் ரேஷன் பொருட்களை வாங்குவதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல்,  தண்டுமாநகர்  பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.  இதனால், மேற்கண்ட பகுதிகளுக்கு  மட்டும் தனியாக ஒரு ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு  கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த 2015-2016ம் ஆண்டு திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து, ₹ 6.50 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டு  தண்டுமாநகர் பகுதி  மக்களுக்காக புதிய ரேஷன் கடை 2018ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

பின்னர், இந்த கடை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டு, 2 மாதம் மட்டுமே செயல்பட்டது. அதன் பிறகு, மூடியே கிடக்கிறது.  இதனால், தண்டுமாநகர் மக்கள் மீண்டும் 1 கி.மீட்டர் நடந்து சென்று தோட்டகார தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகிறார்கள். எனவே, 2 மாதமாக மூடியே கிடக்கும், இந்த பகுதி நேர ரேஷன் கடையை மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தண்டுமாநகர், ஜெஜெ. நகர்   பகுதியில் 245 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள், ரேஷன் பொருட்கள் வாங்க,  ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தோட்டகார தெருவிற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிரமமாக உள்ளது.

இதனால், கூடுதலாக ஒரு ரேஷன் கடை கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதன் பிறகு ,  எம்.பி நிதியில் புதிய ரேஷன் கடை கட்டுமான பணிகள் நடைபெற்று ஜனவரி மாதம்  திறக்கப்பட்டது. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு தொடர்ந்து,  2 மாதமே கடை இயங்கியது  அதன்பிறகு கடையை மூடிவிட்டனர். இதனால்,மீண்டும் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. எனவே, மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் இந்த ரேஷன் கடையை திறக்க   வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Periyapalayam ,ration shop ,town ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...