×

பெரணமல்லூர் அருகே பைனான்ஸ் நிறுவனத்தினர் மிரட்டியதால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

பெரணமல்லூர், மே 22: பெரணமல்லூர் அருகே கடன் தொல்லையால், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதில் இளம்பெண், அவரது 3 வயது மகன் பலியாகினர். மேலும், கணவன் மற்றும் 2 மகள்கள் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த இமாபுரம் இமாகுர்ஆன் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனு(32). இவரது மனைவி விஜயலட்சுமி(27). இவரது மகள்கள் பிரியதர்ஷினி(12), திவ்யதர்ஷினி(10). மகன் ரித்திக் ரோஷன்(3).
சீனு தனது மனைவி விஜயலட்சுமி பெயரில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ₹8 லட்சம் கடன் பெற்று, மினிலாரி ஒன்றை வாங்கி ஓட்டிவருகிறார். கடன்தொகைக்காக மாதந்தோறும், அவர் ₹25,500 தவணையாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தொழில் சரிவர நடக்காததால் சீனுவால் கடந்த 4 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லையாம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், தவணைத்தொகையை கட்டும்படி நெருக்கடி கொடுத்ததுடன், பணத்தை கட்டவில்லை என்றால் லாரியை எடுத்துச் சென்று விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், சீனுவும் அவரது மனைவி விஜயலட்சுமியும் மனவேதனை அடைந்தனர். மேலும், கடனை தங்களால் திருப்பி செலுத்த முடியாது என எண்ணிய அவர்கள், குடும்பத்துடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் கொண்டு, சீனு, மனைவி குழந்தைகளுடன் தெள்ளாரம்பட்டு ஏரிக்கரைக்கு சென்றார்.
அங்கு குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த சீனு, அதனை மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து குடிக்க வைத்தார். பின்னர், தானும் குடித்தார். சிறிது நேரத்தில் சீனு உள்ளிட்ட 5 ேபரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், சீனு குடும்பத்தினர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை, சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயலட்சுமி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ரித்திக் ரோஷன் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சீனு, அவரது மகள் பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த டிஎஸ்பிக்கள் ஏசுராஜ்(செய்யாறு), பிரகாஷ்பாபு(போளூர்), இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மன்(சேத்துப்பட்டு), வெங்கடேசன்(பெரணமல்லூர்) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விஜயலட்சுமியின் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Peranamallur ,
× RELATED ₹10 கோடி மதிப்பு வளர்ச்சி திட்ட பணிகளை...