×

திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் 200 கூடுதல் கண்காணிப்பு கேமரா * 4 மத்திய பார்வையாளர்கள் வருகை * கலெக்டர் பேட்டி

திருவண்ணாமலை, மே 22: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியிலும், ஆரணி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நாளை நடக்கிறது. அதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு நடத்தினார். சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள், தபால் வாக்கு எண்ணும் இடம், சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்ததாவது:

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 23ம் தேதி (நாளை) காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையும், அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கையும் தொடங்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 வீதம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) எண்ணிக்கை நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையிலும், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையிலும் ஒருவேளை வேறு இருந்தால், ஒப்புகை ரசீது இயந்திரத்தில் பதிவான எண்ணிக்கையே இறுதியானதாக ஏற்கப்படும்.

திருவண்ணாமலை தொகுதியில் 24 சுற்றுகளும், ஆரணி தொகுதியில் 23 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணியில் 1,400 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணிக்கைக்கு எடுத்து வரும் ஊழியர்களுக்கு தனி சீருடை மற்றும் அடையாள எண் வழங்கப்படும். உணவு இடைவேளை இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இரவு 9 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடியும் என எதிர்பார்க்கிறோம். வாக்கு எண்ணிக்கையை பார்வையிடும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருக்கிறோம். மேலும், வாக்கு எண்ணிக்கையை நேரில் கண்காணிக்க, ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 பேர் வீதம், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கு 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. திருவண்ணாமலை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கனவே 104 சிசிடிவி கேமரா உள்ளது. தற்போது, கூடுதலாக 96 கேமரா பொருத்தியிருக்கிறோம். அதேபோல், ஆரணி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 100 சிசிடிவி கேமரா உள்ளது. கூடுதலாக 100 கேமரா பொருத்தியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : counting centers ,Thiruvannamalai ,visitors ,interview ,Collector ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...