×

கோவையில் ₹1 கோடி நகை கொள்ளை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த வாலிபர் கொலை? வேலூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சடலம் மீட்பு

வேலூர், மே 22: கோவை நகை கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் வேலூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சடலமாக கிடந்தார். அவரை யாராவது ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஸ்வான்(22). இவர் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழக- கேரள எல்லையான கோவை க.க.சாவடியில் தனியார் நகைக்கடைக்கு காரில் கொண்டு சென்ற ₹1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கு தொடர்பாக ரிஸ்வான், வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் சென்னை பெரும்புதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 பேரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரிஸ்வான், தமிழ்செல்வன் இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இருவரும் வாரம் ஒருமுறை கோவைக்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளனர். அதேபோல் நேற்று முன்தினமும் ரிஸ்வான் கையெழுத்திடுவதற்காக கோவைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். நேற்று அதிகாலையில் அவரது உறவினர் தொடர்பு கொண்டபோது ரிஸ்வானின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் நேற்று காலை அங்கு சென்று பார்த்தபோது ரிஸ்வான் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தண்டவாளம் அருகே சடலம் இருந்ததால் காட்பாடி ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.துகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரிஸ்வானின் தலை மற்றும் காலில் காயங்கள் இருப்பதால் அவ்வழியாக சென்ற ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரை யாராவது ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், அவரது செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் அனைத்து தகவல்களும் தெரியவரும். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் விசாரித்து வருகிறோம். மேலும் தமிழ்செல்வன் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது'' என்றனர்.


Tags : Vellore ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...