×

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் மறியலால் பரபரப்பு

அரக்கோணம், மே 22: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் நேற்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் கார்கள் ஏற்றுமதி செய்யும் முனையம் உள்ளது. இங்கிருந்து சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் இருந்து மேல்பாக்கத்திற்கு வந்த சரக்கு ரயில் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் யார்டு பகுதியில் சரக்கு ரயிலை முன்னுக்கு பின்னாக இயக்கியபோது இன்ஜின் பகுதியில் இருந்து 5 மற்றும் 6வது பெட்டி தடம் புரண்டு பயங்கர சத்தத்துடன் ரயில் சக்கரங்கள் மண்ணில் புதைந்தது.இந்த விபத்து காரணமாக காட்பாடி- அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சென்னை மார்க்கத்தில் இருந்து பழநி, பெங்களூரு, மங்களூரு, ஆலபுழா, காவேரி, சேரன் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்த அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஊழியர்கள், தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், 4.30 மணியளவில் மெயின் லைன் பகுதியில் உள்ள சரக்கு ரயில் பெட்டிகளின் இணைப்பை துண்டித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, சுமார் 1 மணி நேரம் காலதாமத்திற்கு பிறகு ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தடம் புரண்ட 2 பெட்டிகளை ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் மீட்டனர். ெதாடர்ந்து தண்டவாளங்களை சரிசெய்யும் பணி மதியம் 12 மணியளவில் முடிந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், அடிக்கடி இந்தப்பகுதியில் விபத்து நடப்பது குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாக்ஸ்...
பயணிகள் ரயில் மறியல்
திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் மின்சார ரயில், சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை சிக்னல் கிடைக்காமல் இச்சிபுத்தூர்- தணிகைபோளூர் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி இஞ்ஜின் முன் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே 15 நிமிடங்களில் சிக்னல் கிடைத்ததால் 2 ரயில்களும் புறப்பட்டதை அடுத்து பயணிகள் மறியலை கைவிட்டனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், ‘மேல்பாக்கம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், திருத்தணி ரயில் மார்க்கத்தில் ஒரே நேரத்தில் 2 சரக்கு ரயில்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால், மற்ற ரயில்களுக்கு சிக்னல் கொடுக்காமல் நிறுத்தப்பட்டது' என்றனர்.

Tags : accident ,railway station ,Arakkonam ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!