தூத்துக்குடி மாநகராட்சி சிறுவர் பூங்காக்களில் பழுதான விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடியில் மாநகராட்சி பூங்காக்களில் பழுதடைந்துள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களால் விபத்து அபாயம் உள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள 60 வார்டுகளில் பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிஞ்சிநகர் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை இதுவரை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை. கால்நடைகள் தான் அந்த பூங்காவை பயன்படுத்தி வருகிறது. அதற்குள் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துவிட்டது. அதிகாரிகள் கணக்கு எழுதி பணத்தை எடுத்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதேபோன்று ஆசிரியர் காலனி தேவகிநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. டூவிபுரம் சங்கர நாராயணன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது.

 இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி 41வது வார்டு அ.ம.மு.க. செயலாளர் நடிகர் காசிலிங்கம், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரத்துக்குட்பட்ட டூவிபுரம் பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட சங்கர நாராயணன் பூங்காவில் உள்ள விளையாட்டு கருவிகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் பூங்காவில் விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படும் முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பூங்காவில் மட்டுமல்ல மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் விளையாட்டுக் கருவிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: