கோவில்பட்டி அருகே கண்மாயில் சரள்மண் அள்ளிய ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு

கோவில்பட்டி, மே 22: கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கண்மாயில் அனுமதியின்றி சரள் மண் அள்ளிய ஜேபிசி இயந்திரம் மற்றும் லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.  கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி பஞ்சாயத்தில் ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, அத்தைகொண்டான், கங்கன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் ஆலம்பட்டியில் 67 ஏக்கர் பரப்பரளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீரை நம்பி 200 ஏக்கரில் பாசன விவசாயம் நடைபெற்று வருகிறது.  இங்கு ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையை காலங்களில் ஒரு போகம் நெல் பயிரிடப்படுவது வழக்கமாகும். இந்த கண்மாயில் உள்ள கீழ மற்றும் மேல மடைகளை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இந்நிலையில் ஆலம்பட்டி கண்மாயில் இருந்து சரள்மண் அள்ளி கரை பலப்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டு வேலை நடந்து வருகிறது. நேற்று மாலையில் இந்த கண்மாயில் அரசின் அனுமதியின்றி ஜேபிசி இயந்திரம் மூலம் சரள் மண் அள்ளி லாரிகளில் கொண்டு செல்லப்படுவது கிராம மக்களுக்கு தெரியவந்தது.  இதையறிந்த கிராம மக்கள் ஆலம்பட்டி கண்மாய்க்கு சென்று, அங்கு அனுமதியின்றி சரள்மண் அள்ளி கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கண்மாயில் சரள்மண் அள்ளி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: