கோவில்பட்டி, மே 22: கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த 6ம் நாள் போட்டியில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணி மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் வெற்றி பெற்றனர். கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 11வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் போட்டி நடந்தது. காலை 6.30 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணியுடன் சென்னை சாய் அணியினர் மோதினர். இதில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணியினர் 4:1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாலையில் நடந்த 2வது ஆட்டத்தில் சிஐஎஸ்எப் சண்டிகர் அணியுடன் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் மோதினர். இதில் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் 2:1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர்.