செய்துங்கநல்லூரில் அதிவேகமாக வரும் வாகனங்களால் தொடரும் விபத்து பேரிகார்டு அமைக்கப்படுமா?

செய்துங்கநல்லூர், மே 22: செய்துங்கநல்லூரில் அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடப்பதை தவிர்க்க சாலையின் இருபுறமும் பேரிகார்டு அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.

 நெல்லை- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள  செய்துங்கநல்லூர் சுற்று வட்டார 42 குக்கிராமங்களின் மையமாகத் திகழ்கிறது. இங்கு ரயில் நிலையம், காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் உள்ளதால் தினமும் பல்வேறு பணிநிமித்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்குவந்து செல்வர். புதன்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பது வழக்கம்.

 இங்குள்ள நெல்லை- திருச்செந்தூர் பிரதான சாலை வழியாகத்தான் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்கின்றன. முக்கிய திருவிழா காலங்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இங்குள்ள சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால்  விபத்து ஏற்படுவது தொடர்கதையாக மாறிவிட்டது. எனவே, இதை தவிர்க்க சாலையின் இருபுறமும் ேபரிகார்டுகள் அமைக்க வேண்டும். அத்துடன் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தால் விபத்துகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.

இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், ‘‘செய்துங்கநல்லூரில் ஊருக்குள் அதிவேகமாக வரும் வெளியூர் வாகனங்கள், மெதுவாகத்தான் வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடையும் இல்லாததால் தினம் ஒரு விபத்து நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நடந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  எனவே,  இனியாவது விபத்துகளை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். குறைந்தபட்சம் செய்துங்கநல்லூர் நகரில் சாலையின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: