தடை செய்தும் பலனில்லை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

திருப்பூர், மே21:திருப்பூர் மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து வரும் நிலையில், இதனை தடுக்க முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. பெயரளவுக்கு மட்டுமே சோதனைகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் இதனை இன்னும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்தாத நிலையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. மாநகரில் உள்ள சாக்கடைகள் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பிக்கிடக்கின்றன.  திருப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு ஏராளமான மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. ஆனால், இந்த விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் முறையாக சோதனை நடத்துவதில்லை.

மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி பயன்படுத்தும், சிறிய அளவிலான கடைகளான, பேக்கரிகள், மளிகை கடைகள், தள்ளுவண்டி கடைகள் என அந்த அளவிலேயே சோதனை உள்ளது. இதுபோன்ற சிறிய கடைகளில் சோதனையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் அதிகாரிகளில் சிலர், அபராதத்திற்கான ரசீதை வழங்காமல் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், இன்னும் சில டாஸ்மாக் பார்களில் பரவலாக ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பலமுறை புகார் எழுந்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கி வரும் நிலையில், இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதைவிடுத்து எப்போதாவது புகார் எழும்போது மட்டும் பெயரளவுக்கு சோதனை நடத்துவது சுகாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்காது. எனவே இப்பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் முழு கவனத்தை செலுத்த வேண்டும். விளம்பரத்துக்கும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்காக கணக்கு காட்டுவதற்காகவும் மட்டுமல்லாமல், முறையாக சோதனை மேற்கொண்டால் மட்டுமே சுகாதார சீர்கேடு ஒழியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: