பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்கள் தொடர் மின் தடையால் விவசாயிகள் அவதி

திருப்பூர்,மே21:திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் கிராம புறங்களில் மின் கம்பிகள் அறுந்தும், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளதால் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மின் மோட்டார் இயக்க முடியாமல் விளைநிலங்களுக்கு தண்ணீர் விட முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், மூலனுார், அவநாசி, மங்கலம், பல்லடம் உட்பட பல்வேறு புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ளனர்.  பரம்பிக்குளம்-ஆழியாறு, அமராவதி, திருமூர்த்தி, கீழ்பவானி ஆகிய பாசன வாய்க்கால் மூலம் விவசாயம் செய்கின்றனர். நெல், கரும்பு, வாழை, மக்காச்சோளம், பருத்தி, மஞ்சள், காய்கறிகள், பயிறு வகைகளை , கீரை வகைகள் அதிகளவு பயிர் செய்கின்றனர்.

வாய்க்காலில் தண்ணீர் வராதபோது கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விளைநிலங்களுக்கு தண்ணீர் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த காற்று மற்றும் கனமழையால் பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்தும், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. தற்போது வெய்யின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயிர்களுக்கு தண்ணீர் அவசியமாக தேவைப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில்  குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் இயங்குவதில்லை.

ஒரு சில கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளது. கிராம பகுதிகளில் குறைந்த மின் அழுத்ததால் குடியிருப்புகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் இயங்காததால் அன்றாட தேவைக்கு தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். வசதியானவர்கள் விலைகொடுத்து தண்ணீர் லாரிகளில் வாங்கிக்கொள்கின்றனர். ஏழை, எளிய பொது மக்கள் தண்ணீர் இன்றி நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் கூடுதல் மின் பணியாளர்கள் மூலம் அறுந்துபோன் மின் கம்பிகளை இணைத்தும், பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்களை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இது குறித்து பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்று மற்றும் கன மழையால் மின் கம்பிகள் அறுந்தும், டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து பல நாட்கள் ஆகியும் இது வரை சரி செய்யவில்லை. தாராபுரம் மின் கோட்டத்திற்குட்பட்ட  கொண்டரசம்பாளையம், தளவாய்பட்டணம், கொட்டாப்புளிபாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டார்கள் இயங்க வில்லை.  மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளது. சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூடுதல் பணியாளர்களை நியமித்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: