திருப்பூர் ரயில் நிலையத்தில் இருக்கையின்றி பயணிகள் தவிப்பு

திருப்பூர்,மே 21:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், பிளாட்பாரத்தில் போதியளவு இருக்கை வசதி இல்லாததால், பயணிகள், தரையில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர்.ஈரோடு-கோவை ரயில் மார்க்கத்தில், வழியோர ஸ்டேஷனாக திருப்பூர் உள்ளது. கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் தொழில் நகரமாக இம்மாவட்டம் விளங்கியும், ரயில் போக்குவரத்து சார்ந்த வசதிகள் மிகக் குறைவு. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில், 70 சதவீதம், வெறும் இரண்டு நிமிடம் மட்டுமே, இங்கு, நின்று செல்கின்றன. பயணிகள் எண்ணிக்கை, கடந்த ஐந்தாண்டில், மூன்று மடங்கு அதிகரித்த போதும், இரு பிளாட்பாரத்திலும், பயணிகளுக்கான வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லை. முதல் பிளாட்பார்மில், இரு இடங்களில் மட்டுமே குடிநீர் வசதியுள்ளது. இரண்டாவது பிளாட்பார்மில் அதுவும் இல்லை.

இருக்கும் ஒரு குடிநீர் குழாயும் பழுதாகியுள்ளது. கழிப்பறை வசதியும் போதியளவில் இல்லை. தினசரி, ஆயிரக்கணக்கான பயணிகள், ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருக்கின்றனர். போதியளவு இருக்கை இல்லாததால், ரயில்வே ஸ்டேஷன் படிகட்டுகள் மற்றும் தரையில் அமர்ந்தும், உறங்கியும் ஓய்வெடுக்கின்றனர். இது, நடந்து செல்லும் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இந்த ரயில் நிலையத்தில், பலமுறை ஆய்வு நடத்திய தெற்கு ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப மேம்பாடு, இ- டிக்கெட் புக்கிங் போன்ற விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மாறாக, பயணிகளின் அடிப்படை தேவையான இருக்கை வசதியை ஏற்படுத்துவதில் கூட கவனம் செலுத்துவதில்லை. எனவே, வரும் நாட்களில், ரயில்வே நிர்வாகம், பயணிகள் வசதி சார்ந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: