×

சுற்றுலா பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கன்வாடி ஊழியர்கள்

ஊட்டி, மே 21:  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி உணவு தயாரித்து குறைந்த விலையில் வழங்கப்பட்டது.  நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டுக்கான 123வது மலர் கண்காட்சி கடந்த 17ம் தேதி துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் இதுவரை சுமார் 1.40 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து சென்றுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் தோட்டக்கலை துறை, ராஜ்பவன், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சார்பில் சுமார் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் அதிகளவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் இன்றளவும் பாரம்பரிய உணவுகளை கடைபிடித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தாவரவியல் பூங்காவில் பாரம்பரிய உணவு குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இங்கு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகளை பழமைமாறாது சமைத்து சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர்.  இதில் நவதானிய உணவு, சிறு தானியங்கள், வறுத்த கோதுமை, சாமை உணவுகள், உப்பிட்டு, சத்துமாவு வடை, கீரை வகைகள் போன்ற உணவு வகைகள் பிரதானமாக இடம்பெற்றிருந்தன. சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இலையினால் ஆன தட்டுகளை கொண்டு உணவு பொருட்களை விநியோகித்தனர். இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் வாங்கி உண்டு மகிழ்ந்ததுடன் எதிர்காலத்திலும் இதுபோன்ற அரங்குகள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு