×

கோடை சீசனில் வருமானம் மந்தம்

ஊட்டி, மே 21:  ஊட்டியில் உள்ள லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்துவதால் சுற்றுலா பயணிகள் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் லாட்ஜ் நிர்வாகத்திற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகளை வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழா கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதை காண பெரும்பாலான நடுத்தர மக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் அனைவரும் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை எடுத்து வந்து செல்கின்றனர்.   

இவர்கள், பெரும்பாலும் தற்போது ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் உணவு உட்கொள்வதை தவிர்த்துள்ளனர். வழக்கம் போல், இம்முறையும் உணவு பொருட்களின் விலையை சில ஓட்டல்கள் உயர்த்திவிட்டன. டீ மற்றும் காபியின் விலை உயர்த்தியுள்ளனர். அதேபோல், லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அறைகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது. இதனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.  கோவை, ஈரோடு, திருப்பூர், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஒரே நாளில் வந்து சுற்றி பார்த்துவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். லாட்ஜ் மற்றும் காட்டேஜ் வைத்துள்ளவர்களுக்கு அதிக ஆட்கள் வராத நிலையில், இம்முறை நினைத்த அளவிற்கு வருமானம் இல்லை.


மேலும், சுற்றுலா பயணிகள் ஊட்டியில் கடை வீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துள்ளனர். தாங்களே தயாரித்து எடுத்து வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு, இரவோடு இரவாக பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்கு காரணம், கடந்த காலங்களில் எங்கு சென்றாலும் சுற்றுலா பயணிகள் என்றால் உடனடியாக விலை உயர்த்தி சொல்வதும், கட்டணங்களை அதிகம் வாங்கியதுமே. பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் காற்று வாங்கும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருவதில்லை என புலம்பி தீர்க்கின்றனர். வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணங்களை உயர்த்தி சொல்வதை தவிர்த்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் மூலம் ஊட்டி வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து, வழக்கம் போல் கட்டணங்களை உயர்த்தினால் வரும் ஆண்டுகளில் கோடை சீசன் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிடுவர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...