×

அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் வெளிமாநில நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு கண்டுகொள்ளுமா காவல்துறை?

காரைக்குடி, மே 21:  காரைக்குடி பகுதியில் முன்பின் அறிமுகம் இல்லாத வெளிமாநில நபர்கள்  தொழிலாளர்கள் என்ற பெயரில் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். காரைக்குடி பகுதியில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளதால் மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு பெரும்பாலான குடும்பத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் வீடுகளில்  முதியோர்களே  அதிக அளவில் தனிமையில் உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு திருடர்கள் ஒருசில இடங்களில் பகல் நேரங்களில் தங்களின் கைவரிசை காட்டும் சம்பங்கள் நடந்துள்ளன.

தற்போது இப்பகுதியில் கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடக்கிறது. இப்பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களை விட வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் வேலை பார்க்கின்றனர். வட மாநில தொழிலாளர்களுக்கு கூலி குறைவு என்பதாலும், இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாலும் கட்டிட கான்ட்ராக்டர்கள் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆட்களை அழைத்து வருகின்றனர். இதன் காரணமாக  ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இப்பகுதியில் முகாமிட்டு வேலைபார்த்து வருகின்றனர். தவிர காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள், காரைக்குடியில் உள்ள பேக்கரி மற்றும் சிறிய, பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கமே அதிக அளவில் உள்ளது.

இவர்கள் குறித்த உண்மையான விவரங்களை வேலைக்கு வைத்துள்ள நபர்களுக்கு தெரிவிப்பது இல்லை. தவிர போர்வை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அதிக அளவிலான நபர்கள் உலா வருகின்றனர். இப்பகுதியில்  சிறு சிறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிமாநில நபர்களின்  விவரங்களை சேகரித்தனர். பின்னர் அத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் ஊருக்குள் உலா வரும் வெளிமாநில நபர்கள் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் வட மாநில கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் என்ற போர்வையில் வட மாநிலங்களை சேர்ந்த சமூக விரோதிகளும் ஊடுருவி உள்ளார்களா என விசாரணை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Criminal Proceedings ,movements ,
× RELATED டிட்டோ ஜேக் உண்ணாவிரதம்: 2000 ஆசிரியர்கள் பங்கேற்பு