குடிநீர் குழாய் அமைக்க நாங்க இடம் தருகிறோம்

திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் அடுத்த கள்ளிப்பட்டி மக்கள் குடிநீர் பிடிக்க குழாய்கள் அமைத்து தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குப்பட்டது கள்ளிப்பட்டி கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 200 பேர் வசிக்கிறோம். இங்கு குடிநீர் பிடிக்க குழாய்களே இல்லை. இதனால் பல தெருக்கள் தள்ளி சென்று நாங்கள் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் வீண்மோதல்கள் உண்டாகிறது. இவற்றை தடுக்க எங்கள் பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்து தாகத்தை தீர்க்க வேண்டும். குழாய்கள் அமைப்பதற்கு இடவசதியும் செய்து தருகிறோம்’ என கூறப்பட்டிருந்தது.

நூலக இடம் ஆக்கிரமிப்பு:

முன்னாள் கவுன்சிலர் இளையகுமார் அளித்த மனுவில், ‘திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மங்களாபுரத்தில் நூலகம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் இதுவரை நூலகம் கட்ட முயற்சி எடுக்கவில்லை. இதனால் அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைக்க முயற்சிக்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே நூலகத்தை கட்ட வேண்டும். இல்லாவிட்டால் அந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இதேபோல் அருகிலுள்ள கிணற்றில் தண்ணீர் நன்றாக உள்ளது. இந்த தண்ணீரை மின்மோட்டார் பம்பு செட் மூலம் உறிஞ்சி அருகிலுள்ள தெருக்களுக்கு விநியோகிக்கலாம். பல தெருக்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அலைந்து வருகின்றனர். எனவே கிணற்று நீரை தண்ணீர் இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த 2 மனுக்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடப்பட்டன.

Related Stories: