கோடையில் பயிர் சாகுபடிக்கு முன் விதைகளை கடினப்படுத்தி விதைக்க வேண்டும்

ஓமலூர், மே 21: ஓமலூர் வட்டாரத்தில், கோடையில் பயிர்களை சாகுபடி செய்யும் முன்பு, விதைகளை கடினப்படுத்தி விதைத்தால், வறட்சியை தாங்கி பயிர்கள் வளரும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால், கோடை உழவு செய்வது நிலத்திற்கு நல்லது. தானிய பயிர்களான சோளம், கம்பு ஆகியவற்றை, ஒரு லிட்டர் நீரில் பொட்டாசியம் டை ைஹட்ரஜன் பாஸ்பேட் ரசாயனம் 20 கிராம் கலந்து, கடினப்படுத்திய பின் விதைக்க வேண்டும். உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு போன்ற விதைகளை ஒரு லிட்டர் நீரில், கால்சியம் குளோரைடு 2 கிராம் கலந்து ஊற வைத்து, விதைக்க வேண்டும். மானாவாரி பயிர்களில், பூச்சிக்கொல்லி ரசாயனங்களால், விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

 பயறு வகைகளில், ஒரு கிலோ விதைக்கு, டைமீத்தோயேட் அல்லது இமிடோகுளோபிரிட் 5 முதல் 10 கிராம் வரை கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். பருத்தி ஒரு கிலோ விதைக்கு இமிடோகுளோபிரிட், 5 கிராம் கம்பு ஒரு கிலோ விதைக்கு மெட்லாக்சில் 6 கிராம் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். வீரியம் கொண்ட சீரான சான்று பெற்ற விதைகளை நேர்த்தி செய்து, கடினப்படுத்தி விதைப்பதால், கடும் கோடையிலும் வறட்சியை தாங்கி பயிர்கள் நன்கு வளர்வதோடு, பூச்சி தாக்குதல்களை சமாளித்து, வழக்கமான காலத்தை விட வேகமாக வளர்ந்து, 30 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். இவ்வாறு வேளாண்மைத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: