இலை வாழை சாகுபடி செய்யலாம்

ஓமலூர், மே 21: ஓமலூர் வட்டார விவசாயிகள் இலை வாழை சாகுபடி செய்து லாபமடையலாம் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் வட்டார கிராமங்களில், அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக சூறைக்காற்று வீசுவதால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. வாழை இலை மற்றும் வாழை நார் உற்பத்தி செய்து ஓரளவிற்கு நஷ்டத்தை ஈடுகட்டியுள்ளனர். தற்போது ஓமலூர் வட்டாரத்தில் இலை வாழை சாகுபடி செய்வது உகந்தது. காற்றுக்கு பயந்து வாழை சாகுபடி செய்ய அச்சப்படும் பெரிய விவசாயிகள், அதிக பராமரிப்பு செலவு, உரச்செலவு செய்யாமலே, நீர், மண் வசதி இருந்தால் வெகு வேகமாக வளரும் இலை வாழையை சாகுபடி செய்யலாம்.

பூவன், மொந்தன் வாழை கன்று நட்டு 7வது மாதம் முதல் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் இலை அறுத்து விற்பனை செய்து பயன்பெறலாம். பொதுவாகவே மார்க்கெட்டில் பூவன் வாழை இலைக்கு மவுசு அதிகம். இது மென்மையானது, எளிதில் கிழியாது. தொலைதுாரம் எடுத்துச்செல்ல ஏற்றதாக உள்ளது. ஒரு ஏக்கரில் இலை வாழை சாகுபடி செய்தால் ₹19.35 லட்சம் லாபம் கிடைக்கும். மேலும், வாழைப்பழமும், வாழையை வெட்டிய பிறகு வாழை நார் ஆகிவற்றின் மூலமும் வருவாய் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: