சுடுபால் ஊற்றியதில் காயமடைந்த மாணவனுக்கு ₹2.23 லட்சம் நிதியுதவி

மேச்சேரி, மே 21: மேச்சேரி அருகே சிந்தாமணியூரைச் சேர்ந்த கார்த்திக், ஓமலூர் தனியார் கல்லூரியில் பிஇ 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன், சிந்தாமணியூரில் உள்ள டீ கடைக்கு சென்றார். அங்கு அவரது செல்போனில் வீடியோ பார்த்த போது, அதே பகுதியை சேர்ந்த ஜோதீஸ்வரன் மகன் சபரீசன் என்ற இளைஞர், கடையில் அரசியல் கட்சி தலைவரின் வீடியோவை பார்க்க கூடாது என்று மிரட்டினார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஆவேசமடைந்த சபரீசன் டீ போட வைத்திருந்த சுடுபாலை எடுத்து கார்த்திக் மீது ஊற்றினார். இதில், அவரது உடல் முழுவதும் தீக்காயமேற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ஈரோடு தனியார் மருத்துவமனையில் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார், 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சபரீசனை கைது செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர் கார்த்திக் தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். இந்நிலையில், அனைத்து கவுண்டர்கள் சார்பில், ₹2.23 லட்சத்திற்கான நிதியை திரட்டி, மருத்துவ நிதியுதவியாக வழங்கப்பட்டது.

Related Stories: