மீன் பிடி தடைக்காலம் எதிரொலி கடல் மீன்கள் விலை உயர்வால் வெறிச்சோடிய சேலம் மார்க்கெட்

சேலம், மே 21: தமிழகம் மற்றும் கேரள கடல் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கடல் மீன் சப்ளை வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவில் வரும் 31ம் தேதி வரையிலும், தமிழகத்தில் ஜூன் 16ம் தேதி வரையிலும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, இந்த தடைக்காலம் செயல்பாட்டில் இருக்கிறது. அதனால், அதிகளவு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சேலம் வஉசி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, நாகை மற்றும் கேரளாவில் இருந்து கடல் மீன்கள் அதிகளவு கொண்டுவரப்படும். தற்போது, இந்த பகுதிகளில் இருந்து மிக குறைவான அளவே கடல் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக வஞ்சரம், இறால், பாறை, ஊழி, மத்தி, சங்கரா உள்ளிட்ட பல்வேறு ரக மீன்களின் விலையும் கிலோவுக்கு ₹20 முதல் ₹40 வரையில் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மீன் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. காலை நேரத்தில் களை கட்டியிருக்கும் சேலம் மீன் மார்க்கெட், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஹோட்டல் நடத்துபவர்கள் மட்டும் கடல் மீன்களை வாங்க வந்திருந்தனர். மீன் பிரியர்கள் மிக குறைவாகவே மார்க்கெட்டிற்கு வந்தனர். இன்னும் 15 நாட்களுக்கு மீன் விற்பனை மிகவும் குறைவாக தான் இருக்கும். வரத்து அதிகரிக்கவும் விலை குறைந்து, விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறினர்.

Related Stories: