சேலம் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சிலைகள் திருட்டு

சேலம், மே 21: சேலம் உடையாப்பட்டி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் 2 கற்சிலைகள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம்   உடையாப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் திருடு போவதாக  பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர் சசிகலா, அம்மாபேட்டை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம், நிர்வாக அலுவலராக பொறுப்புக்கு வந்தபோது, கோயிலில் மலையடிவார முருகன், துர்க்கையம்மன் ஆகிய கற்சிலைகள் இருந்தது. தற்போது அந்த சிலைகள் கோயிலில் இல்லை. மர்ம நபர்கள் அதை திருடிச்சென்றுள்ளனர். அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுபற்றி எஸ்ஐ சதீஸ்குமார் விசாரணை நடத்தி, மலையடிவார முருகன், துர்க்கை அம்மன் ஆகிய 2 கற்சிலைகள் திருடுபோயுள்ளதாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து சிலை திருட்டு தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: