×

மழை நீரை சேமிக்க ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

தர்மபுரி, மே 21: பருவமழை நீரை முழுமையாக சேமிக்க, தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 12 லட்சத்து 86,552 பேர் வசிக்கின்றனர். ஆண்டின் சராசரி மழையளவு 760 மி.மீட்டராக உள்ளது. மாவட்டத்தில் 926 ஏரிகள்,  5,301 கிணறுகள், 2056 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள், செட்டிக்கரை, ரெட்ரி, நார்த்தம்பட்டி, லளிகம், பாப்பாரப்பட்டி, பைசுஅள்ளி, சோகத்தூர் உள்பட 73 ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 634 ஏரி, குளங்களும் உள்ளன. இதுதவிர கேசரிகுலஅள்ளி, தொப்பையாறு, வாணியாறு, வரட்டாறு, நாகாவதி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட 7 அணைகளும் வறண்டு காணப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் ஏரிகள், குளங்கள், விவசாய கிணறுகள், அணைகள் வறண்டன.
அனைத்து ஏரிகளிலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மழை பெய்யும் போது, சீமை கருவேல முள்மரங்கள் உறிஞ்சி விடுவதால், மழைநீரை ஏரிகளில் சேமிக்க முடிவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், மாவட்டம் முழுவதும்  ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு