திருவள்ளுவர் பஸ்நிலையம் அருகில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடிநீர் இணைப்பு அமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி, மே 21: திருச்சி திருவள்ளுவர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஏழைகள் வசிக்கும் குடியிருப்பில் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி பொன்மலைக்கோட்டத்திற்கு உட்பட்ட மத்தியபஸ்நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் பஸ்நிலையம் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்வர்கள் தங்களின் குடிநீர் தேவைக்கு குடிநீரேற்று நிலையத்தின் நுழைவுவாயில் முன்பு மாநகராட்சி சார்பில் பொது குடிநீர் பைப் ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த பகுதியைச்சேர்ந்த குடியிருப்பு வாசிகள் குடிநீர் பிடித்துச்செல்கின்றனர்.

இப்படி குடிநீர் பிடிப்பதற்கு இவர்கள் அரிஸ்டோ பகுதியை நோக்கி செல்லும் சாலையில் தான் நடந்து குடங்களுடன் பெண்கள் செல்ல வேண்டும். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்கு குடிநீரும் ஒருநாள்விட்டு ஒருநாள் தான் வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அந்த பகுதி ஏழைகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் வாழும் அனைவருமே ஏழை, எளியோர் தான். தினசரி வாழ்க்கைக்கே கஷ்டத்தில் உள்ளவர்கள் சொந்தமாக பணம் கட்டி தனி குடிநீர் இணைப்பு பெறுவதற்கு அவர்களுக்கு வசதியில்லாத நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் வந்து குடிநீர் பிடித்து செல்வதால் ஏற்படும் விபத்து அசம்பாவிதத்தை தவிர்க்க, அந்த குடியிருப்பு பகுதியிலேயே இரண்டு பொது குடிநீர் குழாய்கள் ஏற்படுத்தி ஏழைகளின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: