நிலத்தடி நீர் வற்றியதால் பூலாங்குளத்துப்பட்டி கிராம மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலம் காவிரிநீர் பெற்றுத்தர கோரிக்கை

திருச்சி, மே 21:  நிலத்தடி நீர் இல்லாததால் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளதால் காவிரிநீர் பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் பூலாங்குளத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர்தான். 1000 அடி போர் போட்டாலும் தண்ணீருக்கு பதில் புகை தான் வரும். இதனால் ஊராட்சி சார்பில் ஊரின் எல்லைப்பகுதியில் வாய்க்கால் பகுதியில் போர் போடப்பட்டது. இதில் குடிநீருக்கு பதிலாக உப்புநீர் வருகிறது. பயன்பாடற்ற உப்புநீரை டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீருக்காக அலையும் அப்பகுதி மக்கள், அந்த ஊரின் வழியாக ராமநாதபுரத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களுக்கு பொருத்தப்பட்ட வால்வு பகுதியில் இருந்து வெளியேறும் நீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல கீழ அம்மாபேட்டை, வடக்கு அம்மா பேட்டையைச் சேர்ந்தவர்களும் இங்குதான் குடிநீர் தேவைக்கு வருகின்றனர். ஒரு ஊராட்சியில் 4 ஊர்களுக்கு இந்த இடத்தில் வரும் நீர் தான் அவர்களுக்கு குடிநீர் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தினமும் 50க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று குடிநீர் பிடிக்க வேண்டிய அவலத்தில் இருந்து வருகின்றனர். தண்ணீர் பிடிக்க வந்தால் ஒரு நாள் பொழுது ஆகிவிடுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து காவிரி நீர் கிடைக்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்து காவிரிநீரை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: