×

முத்துப்பேட்ைட அருகே கற்பகநாதர்குளம்- முனங்காடு இடையே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

முத்துப்பேட்டை, மே 21: முத்துப்பேட்டை அருகே வளவனாறு ஓரமாக செல்லும் கற்பகநாதர்குளம் - முனங்காடு மண் சாலை தார் சாலையாக அமைத்து தரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் உள்ள வளவனாறு பாலத்திலிருந்து முனங்காடு கிராமம் வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் சாலையானது மண் சாலையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் இருக்கும் பொது மயானத்திற்கு செல்ல வசதியாக மயானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காப்பி சாலை போடப்பட்டது. நாளடைவில் முறையாக சாலையை பராமரிக்காததால் அந்த ஒரு கிலோமீட்டர் கப்பி சாலையும் மண் சாலையாக மாறி விட்டது. மழைக்காலத்தில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடக்க கூட முடியாதளவில் மாறி விடும். இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கூட செல்ல முடியாது. தற்போது சில தினங்களுக்கு முன் சில மணி நேரம் பெய்த மழையால் கடல்நீர் ஆற்றில் புகுந்ததில்  சாலை சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.


இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சென்று வருகின்றனர். அதேபோல் கற்பகநாதர்குளம் கிராமத்திலிருந்து முனங்காடு வரையிலான மக்கள் குறுக்கே செல்வதற்கு மாற்று பாதையாக இந்த சாலையை பயன்படுத்தி நடந்து சென்று வருகின்றனர். இந்த சாலையை உயர்த்தி தார் சாலையாக மாற்றி அமைத்தால் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் பேருந்து மற்றும் வாகனங்களில் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வரும் நிலை மாறி நேரம் மிச்சமாகும். இதனால் இந்த பகுதி உட்பட சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பெரிதும் பயனாக அமையும். இது குறித்து இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று தார் சாலை அமைத்து தரக்கோரியும் இதுநாள்வரை எந்த பலனுமில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சாமிதுரை கூறுகையில் இந்த சாலையின் அவசியத்தை உணர்த்தி இந்த சாலையின் உயரத்தை கூட்டி தார்ச்சலையாக அமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. இருக்கின்ற சாலையையும் சரி செய்யவில்லை.

சமீபத்தில் இப்பகுதியில் தடுப்பணை மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு சுமார் 44.86 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாகவும், அந்த நிதியில் இந்த சாலையை செப்பனிடவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தடுப்பணை பனி முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் சாலை பணி நடக்குமா? நடக்காதா? அந்த நிதியில் இந்த சாலை பணி உள்ளதா? என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பதில் கேட்டும் பதில் வந்து சேரவில்லை. இப்படி ஒரு பொறுப்பற்ற அரசாகவும் பொறுப்பற்ற ஒரு துறையாகவும் இந்த அரசு செயல்படுகிறது.. விரைவில் இந்த சாலையை சீரமைக்காவிட்டால் மக்கள் போராடவும் தயாராகி வருகின்றனர் என்றார். இந்தநிலையில் தற்பொழுது இந்த சாலையில் மக்கள் நடக்க கூட முடியாத நிலையிலும் குறிப்பாக மயானத்திற்கு வருபவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதை கருத்தில்கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  மண்சாலையை ஒழுங்குபடுத்தியோ அல்லது தார் சாலையாகவோ  அமைத்து தருவார்களா என்று எதிர்பார்ப்புடன் இப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Tags : road ,Karpaknagar-Mungangadu ,Thiruppadai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...