×

நாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பட்டியலை வழங்க வேண்டும் தேர்தல் அலுவலர் அறிவிப்பு

திருவாரூர், மே 21: நாகை எம்.பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பட்டியலை அளிக்குமாறு தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார். நாகை எம்.பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமானது திருவாரூர் அருகே இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் ஆனந்த் பேசியதாவது, நாகை மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி காலை 8 மணி அளவில் துவங்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு என தனித்தனியாக வழி அமைக்கப்பட்டு உள்ளது.


மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன், லேப்டாப் மற்றும் கேமரா உள்ளிட்ட எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்படுபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் தங்களது முகவர்கள் குறித்த பட்டியலை அவரது புகைப்படங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதிக்கும் ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம் 14 மேஜைகளுக்கும் 14 முகவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒரு வேட்பாளர் அல்லது அவரது முகவர் நியமித்துக் கொள்ளலாம். மேலும் வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முகவர்கள் தங்களது நியமனக்கடிதங்களையும், அடையாள அட்டைகளையும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அந்த முகவர்கள் கவனிக்க வேண்டிய மேஜை எண் குறிப்பிட்டு அடையாள அட்டையானது வழங்கப்படும். இதைத் தவிர அனைத்து மேஜைகள் மீதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணியானது கண்காணிக்கப்படும். இவ்வாறு தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur MLA ,Election Officer ,election officials ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது