×

கன்னடர் தமிழர் வேறுபாடின்றி ஒற்றுமையை உருவாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தேவகவுடாவை வரவேற்றோம் மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மன்னார்குடி, மே 21: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா சுவாமி தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தார். அவரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, தமிழக கர்நாடகாவிற்கு இடையே 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்னை காவிரி மேலாண்மை ஆணையம், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதின் அடிப்படையில் மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளதை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கண்டிப்புடன் பின் பற்றுவதுடன், காவிரியில் உபரி நீர் தமிழகம் வழியே ஆண்டொன்றுக்கு சுமார் 30 டிஎம்சி முதல் 100 டிஎம்சி வரை வங்கக் கடலில் கலப்பதை தடுத்து தமிழக எல்லையான ராசி மணலில் தமிழக அரசு அணைகட்டி தண்ணீரை பயன்படுத்தி கொண்டு காவிரி வலது கரை கர்நாடகாவிற்கு சொந்தமென்பதால் மின்சாரத்தை கர்நாடகம் உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் ஒத்துழைப்புக் கொடுக்க வலியுறுத்தினேன்.  ஜூன் 12ல் ராசி மணல் அனைகட்ட துவக்க உள்ளோம் என்பதையும் எடுத்துரைத்தேன்.
 
அதற்கு தங்கள் கட்சியின் தலைமையில் உள்ள  குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிட வேண்டும்.  தமிழக விவசாயிகளை அழிவிலிருந்து பாதுகாத்திடவும், கர்நாடக, தமிழக மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்திட வேண்டும். மத்தியில் ஆளும் அரசுகள் எதுவாக இருந்தாலும் காவிரி, முல்லை பெரி யாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர்  பிரச்னைகளை முன்வைத்து தென்னிந்திய மக்களின் ஒற்றுமையை அரசியல் உள்நோக்கத்தோடு தடுக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், தென்னிந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் வழிகாட்டி உதவிட தாங்கள் முன் வரவேண்டுமெனவும் வலியுறுத்தியதோடு, கன்னடர் தமிழர் என்ற வேறுபாடின்றி நல்லெண்ண அடிப்படையில் விவசாயிகள் சார்பில் அவருக்கு வரவேற்பளித்து கோரிக்கை மனுவும் அளித்தோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார். மேலும் அவருடன் உடன் வந்த கர்நாடக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் மின்சார துறை அமைச்சருமான ரேவண்ணாவிடமும் காவிரி சம்பந்தமாக  கோரிக்கை மனு அளித்து  வலியுறுத்தியதாகவும் கூறினார்.

Tags : Dean Gowtham ,Tamils ,
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்