மெலட்டூரில் பாகவதமேளா துவக்கம் ஒரு வாரம் நடைபெறும்

தஞ்சை, மே 21: தஞ்சை அருகே மெலட்டூரில் பாரம்பரியம் மிக்க பாகவத மேளா கடந்த 17ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டமாகும். தஞ்சை அருகே மெலட்டூரில் அக்காலத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு தமிழை தாய் மொழியாக கொண்ட ஆண்கள் இதிகாச நாயகர்கள், நாயகிகள் போல் வேடமணிந்து மேடையில் தோன்றி நடித்து வந்தனர்.

இதற்கு பாகவத மேளா நாடகம் என அழைக்கப்பட்டு வந்தது. மெலட்டூரில் இந்நாடங்கங்கள் ஒரு வாரத்திற்கு இரவு நேரங்களில் மட்டும் நடைபெறும். அப்போது மின்சாரம் இல்லாததால் எண்ணெய் விளக்கு திரிகளால் ஏற்றப்பட்ட விளக்கொளி பின்னணியில் இந்நாடங்கள் நடைபெறும். தஞ்சை- நாகை சாலையில் சாலியமங்கலம், மெலட்டூர், தேப்பெருமாநல்லூர் போன்ற பகுதிகளில் மட்டும் இந்நாடகங்கள் இன்றும் நடந்து வருகிறது. இதில் மெலட்டூரில் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாடகங்கள் அங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மெலட்டூரை பூர்வீகமாக கொண்டவர்கள் எங்கிருந்தாலும் வந்து கொள்கின்றனர். இத்துடன் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாகவத மேளா நாடகங்களை காண திரண்டு வருகின்றனர். நடப்பாண்டு பாகவத மேளா நாடக அரங்கேற்றம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் வரவேற்றார். சென்னை கலாஷேத்ரா பவுன்டேசன் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, இங்கு ஆண்டுதோறும் நடைபெறுவது ஒரு கலை நிகழ்ச்சி மட்டும் அல்ல. அதையும் தாண்டி பக்தியையும், பாரம்பரியத்தையும் எடுத்துகாட்டி பாதுகாக்கும் நிகழ்ச்சியாகும். இதைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த ஊரையும் தாண்டி வெளி உலகெங்கிலும் பாகவத மேளா பேசப்பட்டு வருகிறது. எத்தனையோ நவீன மாற்றங்கள் வந்தாலும் ஆண்கள் மட்டுமே நடிக்கும் இந்த விழா இன்றும் சிறப்போடு நடைபெறுவது பாராட்டுக்குரியது என்றார்.

நிகழ்ச்சியில் மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரி விருதை ஆந்திர மாநிலம் ஏழுரு.குச்சுப்புடி கலைஞர் கே.வி.சத்தியநாராயணா, பரதம் என்ற விருதை நட்டுவாங்க வித்வான் ஹரிஹர ஹேரம்பநாதனுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரகலாத சரித்திர நாட்டிய நாடகம் பாரம்பரிய விளக்கொளியில் நடைபெற்றது. தொடர்ந்து 19ம் தேதி மாலை 6 மணி முதல் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இன்று (21ம் தேதி) இரவு 10 மணிக்கு அரிச்சந்திரா பாகவத மேளா நாடகமும், நாளை (22ம் தேதி) இரவு 7.30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணமும், ஆஞ்சநேயர் வழிபாடும் நடைபெற உள்ளது.

Related Stories: