திருப்புறம்பியத்தில் மின்மாற்றி பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 200 ஏக்கரில் கருகும் நெற்பயிர் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து தண்ணீர் விடும் விவசாயிகள்

கும்பகோணம், மே 21: திருப்புறம்பியம் பகுதியில் மின்மாற்றி பழுதானதால் 200 ஏக்கரில் சூழ்பிடிக்கும் பருவத்தில் உள்ள குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது. இதனால் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் தண்ணீர்  இறைத்து வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சி, கடிச்சம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மின்மோட்டார் பம்ப்செட் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் ஆடுதுறை 37 ரக நெல் விதைகளை நடவு செய்து 90 நாட்களாகிறது. தற்போது அனைத்து நெற்பயிரும் பூவும், காயுமாக (சூழ் பிடிக்கும்) பால் பிடிக்கும் பருவத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் திருப்புறம்பியத்தில் உள்ள மின்மாற்றி கடந்த 5 நாட்களாக பழுதாகியுள்ளது.

இதுகுறித்து மின்வாரியத்துக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நெற்பயிர் வாடுவதை கண்ட விவசாயிகள், கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் பம்ப்செட்டில் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை காப்பாற்றி வருகின்றனர். இந்த முறையை ஒரு சில விவசாயிகள் மட்டுமே செய்கின்றனர். ஏழை விவசாயிகள் வருமானமில்லாமல் காய்ந்து வரும் நெற்பயிரை காப்பாற்ற முடியாமல் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து திருப்புறம்பியம் விவசாயி இளங்கோ கூறுகையில், இந்த பகுதியில் மின்மோட்டார் பம்ப்செட் மூலம் முன்கூட்டிய குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது இப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பால் பருவம் எனும் சூழ் பிடிக்கும் பருவத்தில் பூவும், காயுமாக உள்ளது. மகரந்த சேர்க்கை நடைபெறுவதால் இப்போது நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் மின்மாற்றி பழுதாகி கடந்த 5 நாட்களாக தண்ணீர் இல்லாததால் நெற்பயிரில் உள்ள காய்கள் பதராக வாய்ப்புள்ளது.  நெற்பயிரில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் போனால் அனைத்து நெல்களும் வீணாகி விடும். மேலும் நெற்பயிர் காய்ந்து ஒரு சில இடங்களில் பூமி வெடிப்பு விட துவங்கிவிட்டது. காய்ந்து வரும் நெற்பயிரை காப்பாற்ற ஒரு சில விவசாயிகள் ஜெனரேட்டரை வாடகைக்கு அமர்த்தி தண்ணீர் இறைத்து நெற்பயிரை காப்பாற்றி வருகின்றனர். இந்த ஜெனரேட்டருக்கு நாள் வாடகையாக ரூ.3,500, ஒரு மணி நேரத்துக்கு 8 லிட்டர் டீசலும் செலவாகி வருகிறது. விவசாயிகள் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்து காய்ந்து கருகி வரும் நெற்பயிரை காப்பாற்றி வருகின்றனர். எனவே மின்சார வாரியம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக பழுதான மின்மாற்றியை சீரமைத்து மின்சாரத்தை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: